Saturday, October 9, 2010

பரம்பொருளே உனக்கோர் மடல்

கரும வினையை தீர்க்க
பிறவி பயனை அடைய
உடலைக் கொடுத்த இறைவா
மடலை வரைகிறேன் உனக்கே

உடலைக் கொடுத்தாய் ஊனம் இன்றி
பொருளைக் கொடுத்தாய் நலமாய் வாழ
வாழ்க்கையை கொடுத்தாய் வாழ்ந்து பார்க்க
அறிவைக் கொடுத்தாய் உன்னை அறிய

அழகான வீடு, அற்புதமான கணவர்
அருமையான பிள்ளைச் செல்வங்கள்
அளவோடு பொருள் வளம் பொன் வளம்
அனைத்துக்கும் மேலான போதும் என்ற நிறை மனம்

இத்தனையும் அளித்த என் இறைவா
அத்தனைக்கும் நன்றிதான் பாராட்டினேன்
என்னிடம் ஏதும் குறை கண்டாயோ
பின் ஏன் இந்த சோதனை

நீ எனக்கு வைக்கும் பரீட்சையோ
அல்லது என் உள்ளொளிப் பயணத்துக்கு தீட்சையோ
அறிகிலேன் அறிவிலி நான்
என்னை தடுத்தாட் கொள் இறைவா
பின் ஏன்

Friday, October 8, 2010

எனக்கு வகுத்த நெறிமுறைகள் - மெய்யெழுத்து வரிசையில்


எனக்கு வகுத்த நெறிமுறைகள் - மெய்யெழுத்து வரிசையில்

கஞ்சனாய் இராதே
ங போல் வளைந்துக் கொடு
சத்தியம் பேசு
ஞான மார்க்கம் தேடு
டம்பம் வேண்டாம்
கண்ணியம் காட்டு
தண்மையாய் வாழ்
நன்மையை செய்
பவ்யமாக இரு
மந்தமாய் இராதே
யாசிக்காதே அன்பைக் கூட
ரம்மியமான இயற்க்கையை நேசி
லக்ஷத்தில் ஒருவனாய் இரு
வணக்கமாய் இரு
பழகுவதில் இனிமை காட்டு
அளவு முறை எதிலும் கடை பிடி
மறக்க பழகு பிறர் செய்யும் தீமையை
மனதை நீ ஆள பழகு அதை ஆள விடாதே

எனக்கு வகுத்த நெறிமுறைகள் - உயிரெழுத்து வரிசையில்


அனைவரிடமும் அன்புக் காட்டு
ஆசையை சீரமைத்துக் கொள்
இன்பத்தில் அதிக ஆசை வேண்டாம்
ஈகையில் ஈடுபாடு கொள்
உன் உயர்வில் உன்மத்தம் கொள்ளாதே
ஊழ்வினை போக்க செயலாற்று
எங்கும் நீக்கமற உள்ள பரம்பொருளை உணர்
ஏற்றமாய் நினைத்து அதை கொண்டாடு
ஐயம் திரிபற உணர்வாய்
ஒருமையுடன் அவனது திருவடி நினைத்தால்
ஓங்கியே வாழ்வாங்கு வாழலாம்
ஔடதம் என்பது இல்லாமல்
அக்ஹ்தே உன் வாழ்கை பாதை ஆகட்டும்

வாழ்க்கை

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே - ஆனால்
வாழ்வதெல்லாம் வாழ்க்கை தானா
வாழும் வாழ்க்கையில் பயனுண்டா
வாழ்த்துக்கள் பலவும் உனக்குண்டா

நித்தம் நித்தம் செய்தது என்ன என்றே
சித்தம் கலங்காது யோசித்தே - கண்டேன்
நிதமும் உண்டு, உறங்கி, உறங்கி உண்டு
வேறு என்ன சாதித்தோம் - இது வாழ்க்கையா

இது நாள் வாழ்க்கை வீணாகி போனது
இதையே நினைத்து கலங்காதே
இனியும் நாளை கடத்தாதே
இனிதே தொடங்கு இன்று முதல்
என்றே செய்தேன் முடிவினை
நன்றே வரைந்தேன் நெறிமுறை
இன்றே நானும் செயல்படுத்த
சற்றே பொறுங்களேன் அடுத்த - போஸ்ட்க்கு

ரசனை

இயற்கையின் அழகே அழகு,
விடியற்காலை பறவையின் கீச் கீச் ஒலி செவிக்கழகு
தோட்டத்து பூக்களின் வித வித வண்ணம் அழகோ அழகு
பூவினை சுற்றும் வண்ணத்து பூச்சியும் அழகு
மரத்தில் காய்த்துத் தொங்கும் கனிகளோ மிக அழகு
காக்கை தன் குஞ்சுக்கு ஊட்டும் அழகு தான் என்ன
பசு தன் கன்றை நாவால் தடவிக் கொடுக்கும் தாய்மையும் அழகு
யாரை ஏமாற்றலாம் என்று பார்த்துக் கொண்டு நிற்கும் பூனையும் அழகு
போடுவது ஒரு சிறு பிஸ்கட் துண்டு ஆனாலும் நாய் வாலை ஆட்டும் அழகே அழகு
இன்னும் எத்தனை எத்தனை அழகுகள் இயற்கைக்கு
அனைத்தையும் ரசிக்க நேரம் தான் இல்லையே
வீணாக்க வேண்டாமே ஒரு க்ஷண பொழுதையும்
இனி காணலாம் கண் கொண்டு எதிரில் நடக்கும் நிகழ்ச்சியை
ரசிப்போம் அனுபவிப்போம் கொண்டாடுவோம்.

Tuesday, October 5, 2010

ஒரு தேடல்

ஒரு தேடல்

நான் யார்?
இது என்ன கேள்வி? நான் ஒரு மனிதன்
மனிதன் என்றால்? எதை கூறுகிறாய்?
உயிரா உடலா மனமா

உடல் தான் மனிதன் என்றால்
உயிர் போன பிறகு அது சவம் அன்றோ
பின் இந்த உயிர் தான் மனிதனா
உடலற்ற உயிர் ஆவி அன்றோ

மற்று உடலும் உயிரும் சேர்ந்தது தான் மனிதன்
ஓ இதுவும் தவறு தான்
உயிரினங்கள் அனைத்துக்கும்
உடலும் உண்டு உயிரும் உண்டு
அவைகளை மனிதன் என்பதில்லையே

பின் என்ன தான் செய்வது
மனம் தான் மனிதனா
மனம் அனைவருக்கும் தான் உள்ளது
அது நல்லதை நினைக்கிறதா அல்ல
அல்லதை நினைக்கிறதா என்பது
தெரியாத போது அதை மனிதன்
என்று ஒப்புக் கொள்ள முடியாது
மூன்றும் இருந்தும் மனிதன் அல்ல
மனம் + இதன் தான் மனிதன்
இதமாக இருக்க பழகினால்
மனிதன் ஆகலாம் இல்லையேல்
விலங்கு தான் - அந்தகோ -
பாவம் விலங்குகள் - அவை
நம்மை விட மேலானவை
அவற்றிற்கு ஆறாவது அறிவு இல்லை
என்பது உண்மைதான்
ஆனால் ஒரு தேர்வு
ஒரு மனிதனை கண்ணை கட்டியும்
ஒரு பசு மாட்டையும் ஓட்டிச் சென்று
புதிதாக ஒரு இடத்தில் விட்டு விட்டு
வந்தால் பசு மாடு மீண்டும்
புறப்பட்ட இடத்திற்கே வந்து விடும்
ஆனால் மனிதனால் முடியாது
ஏனெனில் பசுவிற்கு லோகாதய
விஷயங்களில் ஈடுபாடு கிடையாது
ஆனால் மனிதன் அப்படி அல்ல
இறைவன் தந்த ஆறாம் அறிவால்
இறைவனை அறிவோம்
செய்யும் செயல்கள்
இறைவனுக்கே அற்பித்து
எங்கு இருந்து வந்தோமோ
அங்கேயே போவோம்
மனிதனாக வாழ்வோம்
மனித நேயம் வளர்ப்போம்
இறைவனை அறிவோம்
இறையோடு ஒன்றுவோம்

தேடல் தொடரும் .

Friday, October 1, 2010

மனம்

அலைபாயும் மனத்தை அடக்கியே பார்த்தேன்
அந்தகோ பரிதாபம் என்று ஒரு குரல் கேட்டேன்
திரும்பி பார்த்தால் ஒருவரும் இல்லையே
ஆனால் மீண்டும் ஓர் சிரிப்பலை
புரியத்தான் இல்லையே - இந்த நையாண்டி
யார் என்று குழம்பித் தான் போனேன் ஒரு வினாடி
திடீரென ஒரு மின்னல் பளிச் பளிச் என் மண்டையில்
நையாண்டி மேளம் செய்தது என் மனமோ என்று
உடனே கேட்டேன் மனதை _ நீயா என்று
ஆமாம் அசடே நான் தான் என்றது
ஒரு புறம் அழுகை ஒருபுறம் கோபம்
என்ன திமிரா நையாண்டி ஏன் என்றேன்
என் அழுகையில் கரைந்த என் மனம் சொன்னது
என்னை அடக்க நினைக்காதே நான் அடங்க மாட்டேன்
என்னை அறிய நினையேன், நீ வேறு நான் வேறு அல்ல
என்பதை உணர்வாயே என்றது மனமே
முயற்சி செய்கிறேன் மனமே உனை அறிய தினமே
என்று முயற்சியை ஆரம்பித்தேன்.
ஹாய் என்ன குறட்டை காலை வேளையில்
என்ற கணவரின் குரல் கேட்டு எழுந்தால்
மீண்டும் கேட்டது மனத்தின் நையாண்டி