எங்கே சென்றது ஈரம் ?
அன்பே சிவம், அன்பே தெய்வம் இது ஆன்றோர் வாக்கு
அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர்
அன்புடையார் என்பும் பிறர்க்கு இது தெய்வப் புலவர் வாக்கு
ஆனால் இன்றோ அன்பு என்பது ஆன்றோர் சான்றோர் வாக்கு என்ற பெயரில் எழுத்துக்களில் மட்டும் தான் பார்க்க முடிகிறது. எங்கே சென்று கொண்டு இருக்கிறது உலகம். ஒரு புறம் தீவிர வாதம். ஒரு புறம் நாச வேலைகள். அன்பு என்பது குறைந்து கொண்டு வருகிறது.
புரிகிறது என்ன தான் சொல்ல வருகிறாய் என்று கேட்கிறீர்கள் அது தானே.
ஹிந்து நாளிதழில் வந்த ஒரு செய்தி என்னை இதை எழுத தூண்டியது.
ஒரு தந்தை, மனைவியை இழந்தவர், அவரது இரு பிள்ளைகளில் மூத்தவர் வசதி குறைவானவர், இளையவர் வசதி படைத்தவராக இருந்தாலும் தகப்பனார் பெயரில் இருந்த ஒரு வீட்டையும் எழுதி வாங்கி கொண்டு விட்டு அவரை காப்பாற்றாமல் நடுத்தெருவில் நிற்க விட்ட நிலையில் நீதிமன்றம் மூலம் ஜீவனாம்சம் பெற்றதாக ஒரு செய்தி வந்தது.
இப்போது ஈரம் பெற்றோர் பிள்ளைகள் என்ற உறவில் கூட இல்லை. அந்த காலத்தில் கூட்டு குடும்பமாக வாழ்ந்தனர். ஆனால் இப்போது பழங்கதை ஆகி விட்டது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பு செலுத்துவது என்பது குதிரை கொம்பாகி விட்டது. இதற்கு காரணம் தான் என்ன? சுய நலம், தன் முனைப்பு (ஈகோ)
இது குறித்து ஒரு சிலரின் கருத்துக்கள் நான் படித்ததை பகிர்ந்து கொள்கிறேன். இது அனைவருக்கும் தெரிந்தும் கூட இருக்கலாம் . இருந்தும் எனக்கு இது குறித்து எழுத வேண்டும் போல் தோன்றியதால் எழுதுகிறேன்.
பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர் உற்றார் எல்லாம் உறவினர் அல்லர் என்றும் சொல்லி இருகின்றனர்.
நான் சுகி சிவம் அவர்களின் இந்த நாள் இனிய நாள் என்ற தலைப்பில் சிந்தனை உரை தொகுப்பினை படித்தேன் அதில் ஒரு தலைப்பு உங்கள் வீட்டுப் பிள்ளை . அதில் கருத்தரிப்பதெல்லாம் பிள்ளைகள் இல்லை கருத்து அறிந்து நடப்பவர்கள் தான் பிள்ளைகள் என்கிறார். மிகவும் காட்டமாகவே சாடுகிறார். ஒரு புறம் வருத்தம் இருந்தாலும் மேலே பார்த்த செய்தி நாம் இப்படி தான் முடிவெடுக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப் படுகிறோம்.
ஆனால் பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்றும் வசனம் இருக்கிறதே. அதுவும் உண்மை தானே. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்றும் வசனம் இருகிறதே. பெற்றவர்கள் அதிலும் தாய் ஆனவள் தன் குழந்தைகள் எப்படி இருந்தாலும் விட்டு கொடுப்பது இல்லையே. இதற்கு விதி விலக்கு ஒரு சில இருக்கலாம். `
ஆனால் பாசம் தவறு இல்லை. அது பாசமாக நேசமாக இருக்கும் வரை. ஆனால் உண்மையில் அனைவரும் அப்படி பாசத்தோடும் நேசத்தோடும் தான் இருக்கிறோமா என்றால் எங்கோ நெருட வில்லை? உண்மையில் நம்மிடம் எதிர்பார்ப்பு இல்லை. ஏதோ எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கவே செய்கிறது. ஒன்று வளர்ந்த பிறகு அவர்கள் நமக்கு பொருளால், பணத்தால் உடலுழைப்பால் என்று ஏதோ எதிர்பாருப்பு இருக்க தானே செய்கிறது. குறைந்தபட்சம் அவர்கள் நம்மை அன்பு வார்த்தைகளால் அரவணைக்க வேண்டும் என்ற எதிர்பார்பாவது இருக்கிறதா இல்லையா? இது எந்த வகையில் நியாயம். இந்த கேள்வி எனக்கும் சேர்த்தே கேட்டு கொள்கின்ற கேள்வி தான். நிச்சயம் மறுக்க முடியாது.
தலை சிறந்த விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியும் மாணவர்களின் நண்பனுமான திரு ஏ பி ஜெ அப்துல் கலாம் அவர்களின் சுய சரிதையான அக்னி சிறகுகள் என்ற புத்தகத்திலிருந்து சில வரிகள் ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் சென்று உயர்நிலை பள்ளி படிப்புக்காக அவரது தந்தையிடம் விருப்பம் தெரிவித்த போது அவரது தந்தை தாயாருக்கு காலின் ஜிப்ரானின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி ஆறுதல் சொன்ன வரிகள்:
" உங்களுடைய குழந்தைகள் எல்லாம் உங்களுடைய குழந்தைகள் அல்ல. தமக்காகவே ஏங்கிக் கொண்டு இருக்கும் வாழ்கையின் வாரிசுகள் அவர்கள். உங்கள் மூலமாக வந்தவர்கள் அவர்கள். ஆனால் உங்களுக்குள் இருந்து வரவில்லை, அவர்களிடம் நீங்கள் உங்களுடைய அன்பை வழங்கலாம் ஆனால் உங்களுடைய சிந்தனைகளை அல்ல. தங்களுக்கு என்ற சுய சிந்தனை கொண்டவர்கள் அவர்கள். " எத்தனை தாகம் மிக்க வரிகள்.
உலக சமாதானத்திற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட வேதாத்திரி மகரிஷி அவர்களின் சிந்தனை இன்னும் ஒரு படி மேலே சென்று விட்டது. பெற்றோர் பிள்ளை பாசம் மிகுவதால் தான் ஏதோ ஒரு வகையில் போராட்டம். ஆனால் பத்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரையும் அவர்கள் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து அரசு நிறுவனம் குருகுல முறையில் வளர்க்க வேண்டும். அவர்கள் வயதிருக்கு தக்கபடி உணவு, எண்ணத்தில் ஒழுங்கும் உறுதியும் அடையத் தகுந்த மனோபழக்கம், செயல் பழக்கம் இவைகளை தருவதற்குச் சுகாதார , மனோதத்துவ விஞ்ஞான நிபுணர்களின் பொறுப்பில் திட்டம் வகுத்து எல்லா குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்க்க வேண்டும். பெற்றவர் பாசத்தால் எண்ணிறந்த குழந்தைகள் சமூக வாழ்விற்கு பயனற்றவர்களாக ஆகி விடுகிறார்கள் என்பது அவரது ஆணித்தரமான கருத்து. இதுவும் நன்றாக தானே இருக்கிறது. குருகுல வாசத்தில் படிப்பு என்பது புராண காலங்களில் இருந்தது தானே. இன்றைக்கும் குருகுல வாச படிப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாத போதும் அது ஒருவரை மனிதராக உருவாக்கும் கேந்த்ரமாக இல்லை என்பதுதான் உண்மை. மதம் சார்ந்த விஷயங்கள் தானே கற்று தரப்படுகிறது. இன்றைய கால கட்டதிருக்கு மனித நேயம், அன்பு கருணை இதுவல்லவோ முக்கியம். அந்த நாள் இனி வருமா? வரும் என்று நம்பிக்கை கொள்வோம். நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு.
முற்றும்.
No comments:
Post a Comment