Monday, December 27, 2010

jayadevar contd.

ஜகநாத க்ஷேத்ரத்துக்கு அடுத்துள்ள சில பகுதிகள் கிரவுஞ்ச மன்னனது சுவாதீனத்தில் இருந்தது. கிரவுஞ்ச மன்னன் சில ஆட்கள் புடை சூழ வேட்டையாட காட்டுக்குச் சென்றான். நீர் வேட்கை எடுக்கவே நீர் நிலையை தேடி வந்தான். இறைவனனின் கருணை தான் என்ன என்று பாருங்களேன். அவனுக்கு நீர் வேட்கை ஏற்பட்டு அங்கு வர அந்த பாழும் கிணறு தென்படதொடு அல்லாமல் ஏதோ ஓசை கேட்கிறதே என்று கிணற்றில் எட்டிப் பார்க்க அங்கு வீசிய ஒளியில் அவன் கண்கள் சற்றே மறைத்தன. பின்னர் கூர்ந்து கவனிக்க ஒரு தபஸ்வி மகா தேஜசுடன் கிணற்றில் விழுந்து கிடப்பதை கண்டான்.

சிவபக்தனான அரசன் உடனே சிவனை நினைத்து மகாதேவா மகான் யாரோ தவறி விழுந்திருக்கிறார், அவரை ஆண்டு அருள் புரிவாயாப்பா என்று கிணற்று அருகே நெருங்கி தான் இறங்க முயற்சி செய்தான். இதற்கிடையே இரு வீரர்கள் கிணற்றில் விழுந்து கிடந்த ஜெயதேவரை கரை சேர்த்தனர். அப்போது தான் அரசன் கவனித்தான் அவரது கைகளும் கால்களும் வெட்டப்பட்டு இருப்பதை பார்த்து அரண்டு போனான். நல்ல அரசாட்சியிலே இப்படியும் நடைபெற்றதே இதென்ன கொடுமை, இத்தகைய மகானுக்கு இவ்வளவு பெரிய தீங்கை விளைவித்தது யாராய் இருக்கக்கூடும் என்று கதறி அரற்றினான் மன்னன். அப்போதும் ஜெயதேவரின் சமாதி நிலை கலையவில்லை.

சிறிது நேரம் கழித்து கண் விழித்த அவர் செவிகளில் மன்னரின் சொற்கள் விழவும் மன்னா கோபம் வேண்டாம், யாரையும் குறை சொல்லி பயன் இல்லை. என் ஊழ்வினையும் இறைவன் திருவுள்ளமும் அப்படி இருக்க யார் தான் என்ன செய்ய முடியும்? தவிரவும் இறைவனைபேரருளின் முன்பு இந்த உடலுக்கு ஏற்பட்ட இந்த சிறு துன்பம் என்ன செய்து விட முடியும் என்று கோபத்தில் கொந்தளித்து கொண்டு இருந்த மன்னரை தேற்றினார் ஜெயதேவர்.

உடனே மன்னருக்கு மகா வியப்பு. இவர் யார் என்று தெரியவில்லையே, முற்றும் துறந்த மெய்ஞானி தான் போல இருக்கு. கைகால்களை வெட்டப்பட்ட நிலையிலும் இவ்வளவு சாந்தமா பெரியார்கள் அனைவரும் இப்படித்தான் வாழ்கின்றனர் என்று அவரை பணிந்து நின்றான். பின்னர் மெல்ல பல்லக்கிலே ஏற்றி அழைத்துச் சென்று தன குருவாக ஏற்றுகொண்டான். அரசவை மருத்துவர்கள் அவர்கள் காயங்களுக்கு சிகித்சை அளித்தனர். மன்னனும் இவருக்கு பணிவிடை செய்வதே தன் வாழ்வில் முக்தி என கருதி அவருக்கு பணிவிடை செய்து கொண்டு இருந்தான்.

ஜய்தேவரோ, மன்னா , உன் கடமையை நீ செய்ய வேண்டும், உன்னை நம்பி உள்ள குடிமக்களின் நலன் தான் ஒரு கொற்றவனுக்கு அழகு. முதலில் நீ கடமையை செய் பின்னர் ஆத்ம விசாரணை நடத்தலாம் என்று கூறி ராஜ காரியங்களை நடத்த வேண்டி அதற்கான வழிகளையும் போதித்தார். அர்ஜுனன் எவ்வாறு கண்ணனின் கீதா உபதேசத்தில் கட்டுப்பட்டு கடமையைச் செய்ய எழுந்தானோ அது போல் கிரவுஞ்ச மன்னனும் ஜெயதேவரின் நல்லுபதேசத்தை ஏற்று கடமை கவனிக்கச் சென்றான்

No comments: