Saturday, October 30, 2010

மலரினும் மெலிதோ அவள் மனம்

மலரினும் மெல்லியல் அவளே
மெழுகென உருகிடும் மனமே
என்னரும் தோழியும் அவளே
சொல்லவா அவளின் குணத்தை

வாடிய செடிக்கு நீர் பாய்ச்சியே
செடியின் நகைப்பை பாரென சொல்வாள்
வாழையின் இலையை கிள்ள
வாழை அழுகிறதே என்பாள்

ஒரு நாள் இரவு மின்சாரம் தட்டு
பறவையின் வடிவில் மெழுகு
அதை ஏற்றியே வைத்தேன் அங்கு
சற்றே நேரம் போனது

மெழுகும் உருக ஆரம்பிக்க
மெழுகாய் உருகினாள் என் தோழி
கண்கள் இரண்டிலும் கண்ணீர் வழிய
காரணம் கேட்டேன் என்னவென்றே
பறவை சாகக் கிடக்கிறேதே என்றாள்

இதுபோல் எத்தனை எத்தனை
அனுபவம் அவளிடம்
என்னவென்றே சொல்வேன்
மலரினும் மெலிதோ அவள் மனம்





Friday, October 29, 2010

பிதாமகர் பீஷ்மர் பார்ட் 3


சந்தனுவிடம் மகனை ஒப்படைத்தல்
சில வருடங்களுக்கு பின்

அந்தி மயங்கும் நேரத்தில் அழகான மாலைப் பொழுதினில்
கங்கை நதியின் கரையினிலே சந்தனு ராஜன் ரசித்து நிற்க
அங்கே கண்ட காட்சி என்ன இந்திரன் தோற்கும் வகையில்
அழகே உருவை வாலிபனொருவன் அஸ்திரம் எய்தி

கங்கையின் பிரவாகத்தை தடுத்து தடுத்து விளையாட
கங்கையின் அழகையும் வாலிபனின் திறனையும் ரசித்திருந்த
சந்தனு ராஜனை கண்டுகொண்டாள் மகனுடன் இருந்த கங்கையுமே
மைந்தனை அவனுக்கு காட்டியே இவனே தேவ விரதன்

உன்னிடம் பெற்ற இந்த மகன்
உந்தன் எட்டாவது புத்திரன்
அஸ்திர சாஸ்திரம் தேர்ந்து விட்டான்
வேதமும் வேதாந்தமும் ஓதி விட்டான்
சாஸ்திரம் அனைத்திலும் தேர்ந்து விட்டான்
வில்லாதி வீரன் போரிலோ சூரன்,
வசிஷ்டர், சுக்ராச்சாரியார் அவனது குருமார்கள்
பரசுராமருக்கு இணையாவன்
அழைத்து செல் அரசே உன் மகனை
சென்று வா மகனே சகல வல்லமையும் பெறுவாய்
என்றே ஆசிர்வதித்து மறைந்தாள் கங்கையவள்



பிதாமகர் பீஷ்மர் பார்ட் 2

சந்தனுவை கங்கை கணவனாக தேர்ந்தெடுத்தல்
சந்தனு வாக்கை தவறியதால் கங்கையும் மகனுடன் சென்று விட்டாள்
செல்லும்போதே சந்தனுவிடம் தன்னை யாரென என்றே அறிவித்தாள்
சொன்னாள் முன்னாள் நிகழ்வை சந்தனு ராஜா கேட்பதற்கே
ரிஷிகளும் முனிவரும் போற்றும் கங்கை நதியின் தேவதை நானே

அழகிய பசுமையும் குன்றுகளும் கொண்ட மலைசாரல்
அங்கே வசிஷ்ட மகரிஷியின் ஆசிரம வாசம்
அஷ்ட வசுக்களும் அங்கே தம் தம் பத்தினியருடன்
ஓடி ஆடி விளையாட அங்கே கண்டனர் கண்ணுக்கு இனிய காட்சி

வசிஷ்டரின் வளர்ப்பாம் நந்தினி பசு
திவ்ய மங்கள ரூபமான அழகிய பசு
தன் கன்றுடன் மேய்வதை கண்டே
மையல் கொண்டே அப்பசுவினைக் கேட்டே
அடம் பிடித்தாள் ஒரு வசுவின் பத்தினியே

ரிஷியின் பசுவது வேண்டாம் நமக்கு தேவர்கள் நமக்கு பசு எதற்கு
ரிஷியின் சாபம் வேண்டாம் நமக்கு சொல்வதை கேட்பாய் சதியே நீயும்
எத்தனை சொல்லியும் கேளா சதியே பதியை கெஞ்ச கொஞ்சி
பூமியில் உள்ள தோழிக்கே பரிசாய் அளிக்க தேவை இப்பசுவே

உடனே தாருங்கள் மறுமொழி வேண்டாம் என்று கூறவே
மதியின் மயக்கம் முனிவரின் சாபம் மறக்க
வசுக்களும் திருடியே சென்றனர் பசுவுடன் கன்றையும்
வசிஷ்டரும் திரும்பினார் தன் குடிலுக்கே

பசுவும் கன்றும் காணாது திகைத்தார் சற்றே
அறிந்தார் நடந்ததை , கொண்டார் சீற்றமும்
சபித்தார் வசுக்களை மானுடராக பிறக்கவே
சாபம் அறிந்த வசுக்களுமே வந்தானர் விரைவாய்

வசிஷ்டரை பணிந்தே மன்னிப்பு கேட்க
வசிஷ்டரும் இரங்கியே சாபத்தை குறைத்தார்
பூமியில் பறப்பது திண்ணமே ஆனால் சிறு மாற்றம்
குற்றம் புரிந்தவன் பல நாள் வாழ்ந்து புகழ் பெற
மற்றவர் உடனே விடுதலை அடைவர் என்றதும்

வசுக்கள் சென்றே கங்கையை வேண்டினர்
பூமியில் பிறந்தே நற் கணவனை அடைந்து
எங்களை பெற்று உடனே நீரில் வீழ்த்தி
எங்களுக்கு விடுதலை அளிப்பாய் என்றே

வசுக்கள் மீது கொண்ட இரக்கம் பூமியில் நானும் வந்தேன்
வசுக்கள் சாபம் தீர்க்க கொண்டேன் உன்னை மணாளனாக
வசுக்கள் சாப விமோசனம் பெறவே வீசினேன் அவர்களை கங்கையில்
எட்டாம் வசுவே இவன் பூமியில் புகழ்பட வாழ்வான்
அவனை வளர்த்தே உன் கையில் நானும் கொடுப்பேன்
என்றே கூறி கங்கையும் சென்றாள் குழந்தையுடன்


தொடரும்



பிதாமகர் பீஷ்மர் பார்ட் 1


அஸ்தினாபுரத்து மகா ராஜா சந்தனு என்றே பெயர்க் கொண்டே
அந்தி மயங்கிய வேளையிலே கங்கைக் கரையில் நின்றபடி
கங்கையின் எழிலை ரசிக்கையிலே
கண்டான் அழகே உருவான தேவதை ondrai
கொண்டான் காதல் அவள் எழிலில் மயங்கியே

கங்கையே அங்கு எழிலுருவாய் மானிடப் பெண்ணாய்
நிற்பதை அறியா சந்தனு காதலில் வயப்பட்டே
என் உயிர் என் உடல் என் தனம் என் அரசு அனைத்தும் உனக்கே
என்னை நீ மணம் புரிவாய் என்றே கெஞ்சினன்

உன்னை மணம் புரிவேன் ஆயின் இரு நிபந்தனை
சரியா என்று கேட்க காதலின் மோகத்தில் சரியென சொல்ல
கங்கையும் சொன்னாள் தன்னை யார் என கேட்கவும் கூடாது
தன் செயல் எதுவானாலும் ஏன் என கேட்கவும் கூடாது

காதலின் வயப்பட்ட சந்தனுவும் கங்கையின் நிபந்தனை தன்னை
மறுக்காமல் ஒப்புதல் அளித்தே மணமும் கொண்டான் அவளையே
இல்லறம் என்ற நல்லறத்தை இனிதே நடத்திய இருவருமே
அன்பில் திளைத்து ஆனந்தத்தில் மூழ்கிய தருணம்

கங்கையும் பெற்றாள் ஏழுக் குழந்தைகளை பெற்றதும்
குழந்தைகள் அனைவரையும் கங்கையில் தூக்கியே எறிந்துவிட்டாள்
கொடுத்த வாக்கிற்கிணங்கி மௌனமே காத்தான் சந்தனு மகாராஜா
மனதினில் பாரம் அழுத்தியது காரணம் ஏன் என புரியாமல்

நாட்கள் சென்றன கங்கையும் ஈன்றாள் எட்டாம் குழந்தை
ஈன்றதும் எடுத்தாள் குழந்தையை கங்கையில் வீச
பொறுமை இழந்த அரசனுமே காரணம் கேட்டே தடுக்க
கோபம் கொண்டாள் கங்கையவள் நோக்கினாள் அரசனை

வாக்குத் தவறி விட்டாய் மன்னா இனி நான் செல்கிறேன்
குழந்தையை நானே வளர்ப்பேன் சிறிது காலம்
பின்னர் ஒப்படைக்கிறேன் உன்னிடம் என்றே கூறி
கங்கையும் தன் இருப்பிடம் சென்று விடடாள்

Monday, October 25, 2010

எதையும் மதிப்போம்

நாம் உயர்வாக இருக்கும்போது
நம் உயர்வில் கர்வம் கொள்ளலாம்
பிறரை தாழ்வென்று எண்ணுதற்கு
நமக்கேது உரிமை
பிறரிலும் பல திறமை இருக்கலாம்

நம் மதம் சிறந்ததாக இருக்கலாம்
பிறர் மதத்தை இழிவு படுத்த நாம் யார்
அணைத்து மதங்களும் ஒரே போதனையை
சொல்லும்போது
பாதைகள் வேறாகலாம்
ஆனால் சேரிடம் ஒன்றன்றோ

இறைவனின் படைப்பில் நாம் பெரும்
அறிவுரைதான் எத்தனையோ இருக்க
புழுவையும் மதிக்க நாம் கற்றுக்
கொள்ள வேண்டுமே

Friday, October 22, 2010

பாடம் படிப்போம்

நதிகள் ஆயிரம் சேர்ந்தாலும் கடல் கரை புரண்டு ஓடுவதில்லையே
ஆறுகள் நீரைக் கொண்டு சேர்க்காவிட்டாலும் கடல் வற்றுவதில்லையே
இன்ப துன்பம் இரண்டுமே இணைந்தது வாழ்க்கையே என்று அறிந்தும்
இன்பம் வரும்போது கொக்கரித்தும் துன்பம் வரும்போது துவண்டும்
வருந்தும் மூட மனிதா சுக துக்கம் இரண்டையும் ஒன்றாக பாவித்து
சம நிலையில் இருக்கக் கற்றுக்கொள் என்று சொல்கிறதோ கடலுமே?

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை அனைத்தையும் விலக்கினால்
மனிதன் மனிதாபிமானத்துடனும் இருந்துவிட்டால் வாழ்க்கையில் தான் ஏது துன்பம்
விட்டில் பூச்சிகள் சுகமாய் கூடி மகிழ்வாய் ஆடி பாடி பறந்து விளையாட
ஒரு விட்டில் பூச்சி விளக்கின் ஒளியில் மகிழ்ந்து அதில் தானே விழுந்து
மாண்டது போல் மனிதா நீயும் பெண்ணாசையில் மகிழ்தே உன்னை இழக்காதே
என்றே இந்த விட்டில் பூச்சி நமக்கு கூறும் அறிவுரையோ?

தினமும் அயர்ச்சியின்றி பூவிற்கு பூவாய்த் தாவி தாவி தேனீக்கள்
மதுவை உறிஞ்சி சேகரிக்க மானுடன் அதனை இரக்கமின்றியே
பறித்து தனக்கே பயன்படுத்த பாவம் தேனீ தன் தேவைக்கு மீறியே
சேகரித்த தேனை இழந்ததை போலே நாமும் ஆகக் கூடாது
தேவைக்கு மேலே பெறுவதை இல்லாதவருக்கு ஈயப் பழகுதல் வேணும்
தேவைக்கு மேலே சேர்த்தால் பறிபோய்விடும் என்பதை உணர்த்தும்
தேனீயின் செய்கை லோபியின் சொத்து பிறரிடம் சேரும் என்பதையும்
கூறாமல் கூறுகிறதோ?

குளவி ஒரு புழுவை கொட்டி கொட்டி குளவியாகவே மாற்றும்
குளவி போல் நாமும் இறைவனிடம் பக்தி காட்டி அன்பு செய்து
இறைவனாகவே ஆகமுடியும் என்பது குழவியின் போதனையோ?

சிறுவன் ஒருவன் கவலையின்றி ஆடி பாடி மகிழ்கிறான்
ஓடி ஓடி விளையாடுகிறான் கள்ளமில்லா வெள்ளை மனம்
காலத்தின் கோலத்தில் சிக்காத அன்பு மனம்
சிறுவனைப் போன்றே நாமும் கவலைகள் ஒழித்து
ஈசனிடம் அன்பு காட்டி அவன் அருள் பெறலாமா?

Thursday, October 21, 2010

மலைப்பாம்பு - ஒரு குரு (இயற்கை நமது குரு)


மலைப் பாம்பு எத்தனை நீளம் எத்தனை பருமன்
அதன் எடையோ மிக மிக அதிகம்
உடலுக்கேற்ற உணவு தேவையோ மிக அதிகம்
ஆனாலும் தானாக இரைத் தேடித் போவதில்லை
தனை நோக்கி வரும் பொருளை இரையாகக் கொள்கிறது
மலைப் பாம்பு முட்டையிட அதை காத்து குட்டி வரும்வரை
அது பட்டினியே கிடக்குதப்பா, தனை நாடி உணவேதும்
வாராத போதும் தன குட்டிக்காக பசி பொருக்குதப்பா
உணவேதும் கிடைக்கலேன்னா உயிரையே விடுகுதப்பா
அதைப் போலே அனைவரும் உடல் சுகம் தேடாது
உள்ளதை கொண்டு வாழ பழகனும்பா அப்போது
ஞானமும் கிட்டும்மப்பா

புறா - ஒரு குரு ( இயற்கை நமது குரு)


ஒரு அழகிய வனம் வித விதமான மரங்கள்
பூக்களும் கனிகளும் காண கண்கொள்ளக் காட்சி
மரக்கிளை ஒன்றில் ஜோடி பறவைகளின் களிஆட்டம் ( இயற்கை நமது குரு)
களிப்பில் வந்தன பறவையின் குஞ்சுகள்
குஞ்சுகள் பசியாற ஜோடியும் பறந்தன இரைத்தேட
குஞ்சுகளை கவனத்துடன் இருக்குமாறு கூறிவிட்டு
வேடன் ஒருவன் விரித்தான் வலையை புறாக்களை பிடிக்கவே
பெற்றோர் இரைத் தேடச் சென்றதுமே வாலுக் குஞ்சுகள்
பறக்கவே முயன்று வலையில் தானே சிக்கின
உணவுடன் வந்த தாய்ப் புறா கண்டது தம் குஞ்சுகளை வலையிலே
குஞ்சுகளுக்காக வருந்திய புறாவும் தானுமே வீழ்ந்தது வலையிலே
அடுத்து வந்த ஆண் புறாவுமே மனைவி மக்கள் வழியே சென்றது
பாவம் பெற்றோர் புறாக்கள் பாசத்தின் வலையில் வீழவே
தாங்களும் சிக்குண்டன வலையிலே - அதுபோல் நாமும்*
சம்சாரம் என்ற வலையிலே சிக்கி தவிக்கிறோம்
சம்சாரம் என்பது தேவையே தாமரை இல்லை தண்ணீர் போலே

avathootha geethayil kanda gurumaargal

அவதூதர் 24 குருமார்களிடம் பாடம் கற்றதாக கூறியுள்ளார் . இது அவதூத கீதை எனப்படும். இருபது நான்கு குருமார்களும் யார் என்றால் நாம் தினசரி காணும் வஸ்துக்களே. அதில் பூமி,காற்று, ஆகாயம், நீர் மற்றும் நெருப்பு, சந்திரன் சூரியன் புற, மலைப்பாம்பு, சமுத்ரம், விட்டில் பூச்சி, தேனீ, யானை, வேடன், மான், மீன், பிங்கலை என்ற வேசி , குர்ரரம் என்ற அழுகுரல் பறவை, பாலகன், கன்னிகை, கொல்லன், சர்ப்பம் , சிலந்தி, குளவி ஆகியவை ஆகும். இந்த கதை ஸ்ரீமத் பாகவதத்தில் அவதூத கீதை என்ற தலைப்பில் காணப்படுகிறது. தினமுமே நாம் காணும் ஒவொரு பொருளில் இருந்தும் ஏதேனும் பாடத்தை கற்றுக் கொண்டே இருக்கலாம். ஆனால் எல்லாவற்றிகும் நேரம் கிடைக்க வேண்டுமே.


சூரியன்

மாபெரும் நெருப்பு கோளம்
பூமியை விடவும் பெரியது
காலையில் கிழக்கே தோன்றி
மாலையில் மேற்க்கே மறையும்
கிழக்குக்கும் மேற்குக்கும் பயணிக்கும்
ஆரஞ்சு வண்ணம் கொண்ட சூரியனே
கோள்களில் ஒன்றான உன்னால்
இம்மானுடமும் உயிரினங்களும் அடையும்
பயன் தான் எண்ணிலும் அடங்குமோ
தாமரை மலர்வதும் பயிர்கள் செழிப்பதும்
உன் செயலால் அன்றோ
பூமியில் இருந்தே நீரதை குடித்தே
மீண்டும் மழையாய் பொழிவிக்கும்
பொழித்து பூமியை செழிப்பாக்கும்
செழிப்பாக்கி உயிர்களை வாழ வைக்கும்
உந்தன் கருணை தான் என்ன
தான் பெற்றதை தனக்கு தானே
என்று இல்லாமல் அனைவருக்கும்
பகிர்ந்து அளித்து மகிழ மகிழ்விக்க
நீ கூறும் நல்லுபதேசமோ
சொல்வாய் சூரியனே
உன் தாள் பணிகிறேன்
இவ்வுலகில் அனைவரும் நலமாய் வழ
தொடரட்டும் உன் இனிய பணியே

Wednesday, October 20, 2010

இயற்கை நமது குரு - 2

நிலவு என்றாலே நினைவுக்கு வருவது குளிர்ச்சி
நிலவுக்கு உண்டு வளர்வதும் தேய்வதும்
ஆனால் அது நிலவின் குணமன்று
இப்பரினாமம் சூரிய ஒளியின் பிரதிபலிப்பே
நிலவைப் போன்றதே நம் உடலும்
வளர்வதும் இல்லைப்பதும் உடலின் குணங்களே
ஆத்மா அழியாதது மாறாதது - இது
நிலவு கற்றுத் தரும் பாடம்.

விண்

விண் எனப்படுவதே ஆகாயம்
எங்கும் நிறைந்தது ஆகாயம்
நிர்மலமானது ஆகாயம்
எல்லாம் வல்ல இறைவன்
எங்கும் நிறைந்தாற்போல்
விண்ணும் எங்கும் நீக்கமற
நிறைந்துள்ளதே அது
நம்முள்ளும் இருகிறதே
ஆகாயத்தைப் போன்றே
பரமாத்மா சொரூபமும்
உள்ளும் புறமும் எப்போதும்
எங்கேயும் நிறைந்துள்ளதுபோல்
இனிய குணங்களோடு
நிர்மல மனதோடு எல்லாம் வல்ல
இறைவனை நம்முள்ளும் காண்போம்

காற்று

காற்றிடமிருந்தே கற்பது என்ன
காற்றில்லாத இடமும் உண்டோ
உணவே இல்லாவிட்டாலும் ஏன்
நீரே இல்லாவிட்டாலும்
ஒரு சில மணிகள் உயிர் வாழலாம்
ஆனால் காற்றின்றி எப்படி வாழ்வோம்

காற்று எங்குதான் செல்லட்டுமே
நறுமணமிக்க பூக்களின் தோட்டத்தில்
நறுமணத்தை பரப்பும்
அழுகிய குப்பைகள் இருக்குமிடத்தே
துர்நாற்றத்தை பரப்பும்

நாற்றமும் துர்நாற்றமும்
பாதிப்பது நம்மையே ஆனால்
காற்றுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை
அப்பழுக்கற்ற காற்றைப்போல்
ஆத்மஸ்வரூபமும் சரீர குணங்களால்
பாதிக்கப்படுவதில்லை

இதுவே காற்று கற்பிக்கும் பாடம்
உணர்ந்தே நாமும் வாழுவோம்
காற்றை போல்
காற்றின் குணாதிசயத்துடன்

neruppu

நெருப்பு பஞ்ச பூதங்களின் மூன்றாவது பூதம்
எத்தனை ஒளி மிக்கது தனக்கென உருவமற்றது
தன்னால் எரியும் பொருளாகவே மாறுவது
பரிசுத்தமானது. தனக்குள் விழும் அத்தனையும்
விழுங்கும் நெருப்பு எதனாலும் பாதிப்படையாதே
மாசும் அடையாது எத்தனையோ பயன் காண்கிறோம்
இறைவனுக்கு அர்ப்பிக்க நெருப்பினால் ஹோமம் வளர்த்து அர்ப்பிக்கிறோம் அத்தனை புனிதன் நெருப்பு
தனக்குள் விழும் பொருளாகவே தான் மாறும் நெருப்பைப் போல்
ஆத்மா அந்தந்த சரீரத்தில் அந்தந்த உருவாக தோற்றமடையுமே
நெருப்பினைப் போன்றே ஞானி தான் செல்லும் இடத்தை
புனிதபடுத்துவதே போல் நாம் செல்லும் இடமும் புனிதமாக
நெருப்பை போல் பரிசுத்தமாக இருக்க முயற்சிப்போமே
அடுத்து தொடரும் காற்றின் அருமை

நீர்

நீர் தண்ணீர் பெயரிலேயே தன்மையைக் கொண்டவள்
பரிசுத்தமானவள், இனிமையானவள் அவளால் எத்தனை நன்மை
உயிர்களுக்கு உயிர்வாழ் இனங்களுக்கு
நீரின்றி அமையாது உலகு என்பது அல்லவோ பெரியோர் மொழி
உடல் தூய்மைக்கு நீர் தேவை உணவு சமைக்க நீர் தேவை
பயிர்களுக்கு நீர் தேவை எத்தனை தேவைகளை பூர்த்தி செய்கிறாள்
நீரோடும் நதி அழகு புண்ணியத் தீர்த்தமது அதில் நீராடினால்
பாவங்கள் போகும் புண்ணியமும் சேரும் அவளைப் போல்
புனிதராகவும் புனிதப்படுத்துபவராகவும் நாம் இருக்க வேண்டும்
என்பதே அவள் கற்று தரும் பாடம்
புனிதராகலாம் புனிதப்படுத்தலாம்
அடுத்தது நெருப்பிடம் பாடம் கற்கலாம்

Tuesday, October 19, 2010

இயற்கை நமது குரு


இயற்கை தான் எத்தனை அழகு - அவை
கற்றுத் தரும் பாடம் தான் எவ்வளவு
விண்ணும், காற்றும் நெருப்பும்
நீரும் நிலமும் இயற்கையன்றோ
அதில் நாம் கற்கும் பாடம் இவையன்றோ

பூமி ஆஹா பூமியை நினைத்தால் எத்தனை பெருமிதம்
அவளோ பஞ்ச பூதங்களில் கடைசி பூதம்
என்னே அவளது பொறுமை என்னே அவளது பெருமை
வெட்டி, கிளறி, தூர் வாரி, மிதித்து இத்தனை நாம் செய்யினும்
அவளோ நமக்கு உயிராகிய பயிரை கனிகளை கைகளை
அல்லவோ நமக்கு வாரி வாரி வழங்குகிறாள்
அவளிடம் நாம் பொறுமையை கற்கலாம்
இன்ன செய்தார்க்கும் இனியவையே செய்யலாம்
நீரைப் பற்றி அடுத்து சொல்கிறேன்

ராமக் காதை தோற்றம்

சூரியக் குலத் தோன்றாலாம் ராமனை நாரதர் புகழ் பாட
அதைக் கேட்ட வால்மீகியும் பரவசத்தில் மூழ்கினார்
சீடர் பரத்வாஜருடன் தமசி நதியில் நீராட செல்கையில்
ஆணும் பெண்ணுமாய் அன்றில் பறவை இரண்டு
ஒன்று கலந்து உறவாடி விளையாடி மகிழ்ந்துக் கொண்டிருக்க
எங்கிருந்தோ வந்த வேடன் அதைக் குறி பாரதி அம்பெய்த
அந்தகோ ஆண் பறவை இரத்தம் பெருக கீழே விழுந்து மாண்டது
துணையை இழந்த பெண் பறவை துக்கம் தாளாமல் கலங்கியது
இக்காட்சியைக் கண்ட முனிவரின் மனமும் இளகியது
பறவை மேல் கொண்ட இரக்கம் கோபமாய் உருவெடுக்க
அடே வேடா ஆண் பறவையைக் கொன்ற நீ ஓரிடத்தில்
நில்லாமல் அலைந்து திரியக் கடவாய் என்றே சபித்தார்
கோபத்தில் கொடுத்த சாபம், கோபம் தெளிந்தப் பின்
வருத்தத்தில் ஆழ்ந்து மீண்டும் மீண்டும் அதிலேயே சுற்றி வர
சாபம் போல் தோன்றிய வார்த்தைகள் பாடலாக புலப்பட
அதிலே நிலைத்து நினைந்து உறைந்து போக
பிரமனும் தோன்றி மேலும் பல கவிதைகள் இது போல்
புனைவாய் அதற்க்கான முன்னோட்டமே இது என
கூறி ராம காதையை படைக்கும்படி அருளிச் செய்ய
நமக்கு கிடைத்ததோ அருமையான ராம காவியம்
வால்மீகி ராமாயணம், படித்தே மகிழ்வோம் நாளுமே
வால்மீகி

மகரிஷி கிருனு தவமது புரிகையில்
கண்களில் வீரியம் பெருக
அதை சுவைத்த பாம்பொன்று
குழந்தை ஒன்றை ஈன்றது

வேடர்கள் குழந்தையைப் பார்க்க
எடுத்து வளர்த்தனர் அன்போடு
பெயரும் இட்டனர் ரிட்சன் என்று
அலாகே உருவான ரிட்சன்

நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாய் வளர்ந்தான் ரிட்சன்
வேடுவ பெண்ணை மணந்தே
குழந்தைகளை ஈன்றான்

வேடுவர் வளர்த்த குழந்தையன்றோ
வேடுவ குலத் தொழிலாம்
விலங்குகளை கொன்றும் வழிப்பறி என்றும்
வாழ்க்கையை நடத்தி வர

ஒரு நாள் சப்த ரிஷிகள் வர
அவர்களை வழிப் பறி செய்தான்
வழிப் பறி பாவம் விட்டு விடு
என ரிஷிகள் சொன்னதை மறுத்து

தம் சொந்தம் சுற்றம் என் செய்வர்
என்றே வினவ, ரிஷிகள் கூறினார்
வேடனே சென்று நீ கேட்டு வா
உன் சுற்றம் உன் பாவத்தை ஏற்குமோ

என்றவுடன் வேடனும் ஓடினான்
சுற்றத்தை கேட்டான் பாவத்தில் பங்கு கொள்ள
சுற்றம் மறுக்கவும் உணர்ந்தான் உண்மையை
தஞ்சமே என்று வீழ்ந்தான் ரிஷிகளின் பாதங்களில்

திருந்திய வேடனுக்கு ஆவணில் அறிவித்து
"மரா" என்ற மந்திரத்தை உபதேசித்து
மரா மரா என்றே ஜபித்து வா என்றனர் ரிஷிகள்
ஒருமையுடன் ஜெபத்தில் ஆழ்ந்தான் வேடனுமே

காலம் சென்றது, மீண்டும் வந்தனர்
ரிஷிகள் அங்கே புற்றிலிருந்து
மீட்டனர் ரிட்சனை மரா ஜபம்
ராம சாபமாகி பாபமும் தொலைந்தது

ஞானி என்றே கூறினார் ரிட்சனை
வால்மீகி என்றும் பெயரிட்டு கௌரவிக்க
சீடரும் பலர் ஏற்பட்டனர் இதுவே
ரிட்சன் வால்மீகி ஆன கதை.

Monday, October 18, 2010

உத்தம புருஷர் யார்?

தர்ம நியாயம் தெரிந்திருக்க
நன்றி மறவாமல் உதவி மிக
சிறிதே ஆனாலும் பெரிதாய்
நினைக்கும் பெருந்தன்மையோடு
நல்லொழுக்கம் கொண்டு
சத்தியம் தவறாது
கண்டவர் வியக்கும் பேரழகோடு
கோபம் கடுஞ்சொல் இல்லாமல்
எதிரிகளையும் தம் குணங்களால்
அஞ்ச வைக்கும் ஆற்றலோடு
நாம் இருந்தால் நாம்
உத்தம புருஷரே - ஆனால்
இத்தனை குணங்களும்
ஒரு சேர கொண்ட ஒரிதயமாகில்
இருந்தால் அது நமக்கு
கொண்டாட்டமே இத்தகு
குணங்களை கொண்ட ஒரு
இதயத்தை நாரதர் காட்ட
வால்மீகியும் வடித்தது
ராமாயணமே
ராமனும் ஆமே கதாநாயகன்.

Thaalaattu

ஆராரோ ஆரீராரோ யாராரோ வந்தாரே
ஆத்தாத்தா வந்தா அவளோடே ஆடினே
அப்பாத்தா வந்தா அவளோடே ஆடினே
மாமன்கார வந்தான் அவனோடே ஆடினே
அத்தேக்காரி வந்தா அவளோடு ஆடினே
எல்லோரோடு ஆடி விட்டு இப்பத்தா கூவுரே
என் புருஷ சினுன்கிரா சீகிரந்தான் தூங்கேண்டா
இதனை பாடு பாடிட்டே இன்னு உனக்கு என்னடா
சீக்கிரமே தூங்கடா ராமன் கதே சொல்றேன்
தசரத ராமன் கௌசல்யா ராமன் விச்வமித்ரநோடே
உபயத்தாலே சீதையை மணந்தானடா
கைகேயி சூழ்ச்சியாலே கானகமே சென்றாண்டா
அனும சுக்ரீவ விபீஷன மற்றும் வானர சேனை
பலத்தோடு ராவணனை கொன்றாண்டா
மீண்டு அயோத்யா வந்து பட்டம் ஏற்றாண்டா
ஆராரோ ஆரீராரோ தூங்கடா கண்ணா
ராமன் கதையும் முடிந்தது
குழந்தையும் தூங்கியது
ஏன் கணவருமே - எரிச்சலுடன் தாய் சென்றால்
படுக்கைக்கே

Wednesday, October 13, 2010

எது சுகம்

தோளிலே முகம் புதைத்து விம்மும்போது
மனம் அறிந்து துயர் துடைக்க
நேசமிக்க கணவரின் தலை வருடல்
சுகமோ சுகம்

அழகான மாலைப் பொழுதில்
இணையாக ஜோடி சேர்ந்து
இயற்கையை ரசிக்கும்போது
செல்லமாக தட்டி செல்லும்
சில்லென்ற காற்று
சுகமோ சுகம்

கடற்கரையில் நிற்கையிலே
அலைப் பெண்களின் அட்டகாசம்
ரசித்துக் கொண்டிருக்கும்போதே
தஞ்சமென சரண் அடைந்தாற்போல்
பாதத்தை வருடுவதும்
சுகமோ சுகம்

காலையில் சென்று
மாலையில் திரும்ப
களைப்பே இருப்பினும்
காலைக் கட்டிக் கொண்டு
கொஞ்சிடும் மழலையின்
அணைப்பும் சுகமோ சுகம்

இத்தனை சுகம் இருந்தாலும்
அத்தனைக்கும் சிகரம்
உடல் தூய்மையோடு
உளத் தூய்மைக் கொண்டு
வாழப் பழக அவ்வாழ்க்கை
சுகமோ சுகம் சுகமோ சுகம்
என்னவென்று சொல்வேன்
இச்சுகத்தை.

Tuesday, October 12, 2010

உத்தம தர்மம் எது?

குருக்ஷேத்ரப் போர் முடிந்தது
தருமரும் அரியணை ஏறினார்
பட்டம் ஏற்றப் பின்
ராஜ சூய வேள்வியும் நடந்தது
வேள்வி முடிந்து அனைவரும்
கலைந்த பின் வேள்வியைப் பற்றி
புகழ் மாலைகள் பல வந்து
குவிந்த வண்ணம் இருந்தது
கேள்விப் பட்ட கீரி ஒன்று
வேள்வி நடந்த இடத்தில்
புரண்டு புரண்டு வந்தது
ஆனால் ஆயாசத்துடன்
உச் உச் என்றது அதைப்
பார்த்த தர்மரும் கீரியை
அழைத்து அணைத்து பரிவுடன்
என்ன வேண்டும் என்று கேட்க
ஹூம் உம்மால் முடியாது
என்றது கீரி - வியப்புடன்
தருமரும் கீரியைப் பார்க்க
கீரி சொன்னது தன கதையை
அய்யா தர்மரே என்னைப் பாரும்
என் ஒரு பக்கத் தங்க நிறத்தை
உமது அரிய பெரிய குணங்களைக்
கேட்டு ஆவலாய் வந்தேன் -
ஏமாற்றமே மிச்சம் என ஆரம்பித்த
கீரியை பார்த்தார் வியப்பு நீங்காமலே
புரியவில்லை விளக்கமாக சொல்
என கீரியை கேட்க அதுவும் சொன்னது
நான் ஒரு வயோதிக தம்பதியினரின்
வீட்டில் கண்டேன்ஒரு காட்சி
வயது முதிர்ந்த பெற்றோருடன்
இருந்தனர் இரு பிள்ளைகள்.
அன்றைய உணவு திணைமா தான்
உணவு அருந்த அமர்ந்த போது
ஒரு அந்தணர் வந்தார் அங்கே
பசி என சொல்லி இளைப்பாற
கொஞ்சம் கேட்டார்.
வயதில் மூத்த பெரியவர் மற்றவர்
கொடுக்க முன் வந்தும் தன்
பங்கினை முன்னம் ஈந்தார்
போதவில்லை என்று மீண்டும் கேட்க
அம்முதியவர் மனைவி தன் பங்கை ஈந்தார்.
மீண்டும் மீண்டும் என்று கேட்ட போது
அப்பிள்ளைகள் இருவரும் தம்
பங்கை ஈந்தனர்.
நால்வரும் தான் தான் கொடுப்பேன்
தான் தான் கொடுப்பேன் என்று
போட்டியிட்டு அனைவரும் தம் தம்
பங்கை கொடுக்க
அந்தணர் ரூபத்தில் வந்த
இறைவனும் அவர்களை
அழகான விமானத்தில் வைகுந்தம்
அழைத்துச் சென்றார்.
அங்கே சிந்திய மாவில் புரண்டதில்
ஒரு பாதி பொன்னிறம் ஆயிற்று
மறு பாதிக்கு இங்கு வந்தேன்
இப்போது சொல் அரசே
நான் கேட்டதை உன்னால்
கொடுக்க முடியுமா என்றே
கீரியும் கேட்டது தருமரை
வெட்கத்தினால் தலை குனிந்தார்
தருமருமே


நாம் என்றும் அடிமைகளே

ஞானியின் குருகுலம் மரத்தடி நிழலிலே
சீடர்கள் குழுமினர் வேத பாடம் கற்க
ஞானியும் வந்தார் பாடத்தை தொடங்கினார்
பூனை ஒன்று குறுக்கிலும் நெடுக்கிலும் ஓட
சீடர்கள் கவனம் திசை திரும்பியது
ஞானி சொன்னார் ஒரு சீடரிடம்
பூனையை பிடித்து கட்டு என்றே
தினமும் பூனை குறுக்கே வரவும்
இதுவே தினமும் வாடிக்கைஆச்சு
காலம் சென்றது ஞானியும் அடைந்தார்
இறைவனின் திருவடி - ஞானியின் பாடம்
கேட்ட பூனையும் அவர் வழி சென்றது
சீடரில் மூத்தவர் ஞானியின் பீடத்தில்
வழக்கம் போல் கூடினர் சீடர் குழாமுமே
பாடம் தொடங்கும் முன் பார்த்தால்
பூனையைக் கட்டும் கம்பம் வெறுமை
பார்த்தார் ஞானி , உடனே சீடரை அழைத்து
பூனையை சீக்கிரம் கொண்டு வந்து கட்டுங்கள்
பாடம் நடத்த நேரமாச்சு என்றார்
காரணம் அறியாது, அறியவும் முயலாது
முன்னம் நடந்ததை பழக்கம் என கருதிய
புதிய ஞானியைப் போன்றே
விளக்கம் காணாது பழக்கம் வழி நடக்கும்
அனைவரும் மூட நம்பிக்கைக்கு அடிமைகளே!

Saturday, October 9, 2010

பழமொழி 2

ஆசை 60 நாள் மோகம் 30 நாள்

இதற்கும் பொதுவாக நாம் கொள்ளும் அர்த்தமே வேறு

ஆனால் என் வகுப்பில் சொல்லிக் கொடுத்தது
திருமணம் ஆகி முதல் அறுபது நாட்கள் ஆசை இன்னும் முப்பது நாட்கள் மோகம் என்ற வகையில் கணவன் மனைவி திருமண பந்தத்தின் புது உறவை ரசித்து அனுபவிக்கலாம். பின்னர் கணவன் மனைவியின் கூடல் ஒரு நெறிமுறையோடு இருக்க வேண்டும். அதாவது தாம்பத்யம் என்பது மாதத்தில் இரண்டு முறை தான் வைத்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு இருந்தால் உடல் நலம் வாழ்க்கை நலம் அனைத்தும் மிக சீராக இருக்கும்.

பழமொழி

ஆணைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்

இந்த பழமொழியை யார் எப்படி புரிந்துக் கொள்கிறார்களோ தெரியாது. நான் செல்லும் ஆன்மீக வகுப்பில் என் ஆசானால் சொல்லப்பட்ட அற்புதமான விளக்கம் இதோ
ஆணை = ஆ நெய் பசுவின் நெய் பசுவின் நெய் நாம் அதிக அளவில் சிறு வயதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
பூனை = பூ நெய் பூவிலிருந்து கிடைக்கும் நெய் அதாவது தேன் நாற்பது வயதுக்குப் பின் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இது தான் மேற்சொன்ன பழமொழிக்கு அர்த்தம்.

பரம்பொருளே உனக்கோர் மடல்

கரும வினையை தீர்க்க
பிறவி பயனை அடைய
உடலைக் கொடுத்த இறைவா
மடலை வரைகிறேன் உனக்கே

உடலைக் கொடுத்தாய் ஊனம் இன்றி
பொருளைக் கொடுத்தாய் நலமாய் வாழ
வாழ்க்கையை கொடுத்தாய் வாழ்ந்து பார்க்க
அறிவைக் கொடுத்தாய் உன்னை அறிய

அழகான வீடு, அற்புதமான கணவர்
அருமையான பிள்ளைச் செல்வங்கள்
அளவோடு பொருள் வளம் பொன் வளம்
அனைத்துக்கும் மேலான போதும் என்ற நிறை மனம்

இத்தனையும் அளித்த என் இறைவா
அத்தனைக்கும் நன்றிதான் பாராட்டினேன்
என்னிடம் ஏதும் குறை கண்டாயோ
பின் ஏன் இந்த சோதனை

நீ எனக்கு வைக்கும் பரீட்சையோ
அல்லது என் உள்ளொளிப் பயணத்துக்கு தீட்சையோ
அறிகிலேன் அறிவிலி நான்
என்னை தடுத்தாட் கொள் இறைவா
பின் ஏன்

Friday, October 8, 2010

எனக்கு வகுத்த நெறிமுறைகள் - மெய்யெழுத்து வரிசையில்


எனக்கு வகுத்த நெறிமுறைகள் - மெய்யெழுத்து வரிசையில்

ஞ்சனாய் இராதே
போல் வளைந்துக் கொடு
த்தியம் பேசு
ஞான மார்க்கம் தேடு
ம்பம் வேண்டாம்
ண்ணியம் காட்டு
ண்மையாய் வாழ்
ன்மையை செய்
வ்யமாக இரு
ந்தமாய் இராதே
யாசிக்காதே அன்பைக் கூட
ம்மியமான இயற்க்கையை நேசி
க்ஷத்தில் ஒருவனாய் இரு
ணக்கமாய் இரு
குவதில் இனிமை காட்டு
வு முறை எதிலும் கடை பிடி
க்க பழகு பிறர் செய்யூம் தீமையை
தை நீ ஆள பழகு அதை ஆள விடாதே

எனக்கு வகுத்த நெறிமுறைகள் - உயிரெழுத்து வரிசையில்


அனைவரிடமும் அன்புக் காட்டு
ஆசையை சீரமைத்துக் கொள்
இன்பத்தில் அதிக ஆசை வேண்டாம்
ஈகையில் ஈடுபாடு கொள்
உன் உயர்வில் உன்மத்தம் கொள்ளாதே
ஊழ்வினை போக்க செயலாற்று
எங்கும் நீக்கமற உள்ள பரம்பொருளை உணர்
ஏற்றமாய் நினைத்து அதை கொண்டாடு
ஐயம் திரிபற உணர்வாய்
ஒருமையுடன் அவனது திருவடி நினைத்தால்
ஓங்கியே வாழ்வாங்கு வாழலாம்
ஔடதம் என்பது இல்லாமல்
அக்ஹ்தே உன் வாழ்கை பாதை ஆகட்டும்

வாழ்க்கை

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே - ஆனால்
வாழ்வதெல்லாம் வாழ்க்கை தானா
வாழும் வாழ்க்கையில் பயனுண்டா
வாழ்த்துக்கள் பலவும் உனக்குண்டா

நித்தம் நித்தம் செய்தது என்ன என்றே
சித்தம் கலங்காது யோசித்தே - கண்டேன்
நிதமும் உண்டு, உறங்கி, உறங்கி உண்டு
வேறு என்ன சாதித்தோம் - இது வாழ்க்கையா

இது நாள் வாழ்க்கை வீணாகி போனது
இதையே நினைத்து கலங்காதே
இனியும் நாளை கடத்தாதே
இனிதே தொடங்கு இன்று முதல்
என்றே செய்தேன் முடிவினை
நன்றே வரைந்தேன் நெறிமுறை
இன்றே நானும் செயல்படுத்த
சற்றே பொறுங்களேன் அடுத்த - போஸ்ட்க்கு

ரசனை

இயற்கையின் அழகே அழகு,
விடியற்காலை பறவையின் கீச் கீச் ஒலி செவிக்கழகு
தோட்டத்து பூக்களின் வித வித வண்ணம் அழகோ அழகு
பூவினை சுற்றும் வண்ணத்து பூச்சியும் அழகு
மரத்தில் காய்த்துத் தொங்கும் கனிகளோ மிக அழகு
காக்கை தன் குஞ்சுக்கு ஊட்டும் அழகு தான் என்ன
பசு தன் கன்றை நாவால் தடவிக் கொடுக்கும் தாய்மையும் அழகு
யாரை ஏமாற்றலாம் என்று பார்த்துக் கொண்டு நிற்கும் பூனையும் அழகு
போடுவது ஒரு சிறு பிஸ்கட் துண்டு ஆனாலும் நாய் வாலை ஆட்டும் அழகே அழகு
இன்னும் எத்தனை எத்தனை அழகுகள் இயற்கைக்கு
அனைத்தையும் ரசிக்க நேரம் தான் இல்லையே
வீணாக்க வேண்டாமே ஒரு க்ஷண பொழுதையும்
இனி காணலாம் கண் கொண்டு எதிரில் நடக்கும் நிகழ்ச்சியை
ரசிப்போம் அனுபவிப்போம் கொண்டாடுவோம்.

Tuesday, October 5, 2010

ஒரு தேடல்

ஒரு தேடல்

நான் யார்?
இது என்ன கேள்வி? நான் ஒரு மனிதன்
மனிதன் என்றால்? எதை கூறுகிறாய்?
உயிரா உடலா மனமா

உடல் தான் மனிதன் என்றால்
உயிர் போன பிறகு அது சவம் அன்றோ
பின் இந்த உயிர் தான் மனிதனா
உடலற்ற உயிர் ஆவி அன்றோ

மற்று உடலும் உயிரும் சேர்ந்தது தான் மனிதன்
ஓ இதுவும் தவறு தான்
உயிரினங்கள் அனைத்துக்கும்
உடலும் உண்டு உயிரும் உண்டு
அவைகளை மனிதன் என்பதில்லையே

பின் என்ன தான் செய்வது
மனம் தான் மனிதனா
மனம் அனைவருக்கும் தான் உள்ளது
அது நல்லதை நினைக்கிறதா அல்ல
அல்லதை நினைக்கிறதா என்பது
தெரியாத போது அதை மனிதன்
என்று ஒப்புக் கொள்ள முடியாது
மூன்றும் இருந்தும் மனிதன் அல்ல
மனம் + இதன் தான் மனிதன்
இதமாக இருக்க பழகினால்
மனிதன் ஆகலாம் இல்லையேல்
விலங்கு தான் - அந்தகோ -
பாவம் விலங்குகள் - அவை
நம்மை விட மேலானவை
அவற்றிற்கு ஆறாவது அறிவு இல்லை
என்பது உண்மைதான்
ஆனால் ஒரு தேர்வு
ஒரு மனிதனை கண்ணை கட்டியும்
ஒரு பசு மாட்டையும் ஓட்டிச் சென்று
புதிதாக ஒரு இடத்தில் விட்டு விட்டு
வந்தால் பசு மாடு மீண்டும்
புறப்பட்ட இடத்திற்கே வந்து விடும்
ஆனால் மனிதனால் முடியாது
ஏனெனில் பசுவிற்கு லோகாதய
விஷயங்களில் ஈடுபாடு கிடையாது
ஆனால் மனிதன் அப்படி அல்ல
இறைவன் தந்த ஆறாம் அறிவால்
இறைவனை அறிவோம்
செய்யும் செயல்கள்
இறைவனுக்கே அற்பித்து
எங்கு இருந்து வந்தோமோ
அங்கேயே போவோம்
மனிதனாக வாழ்வோம்
மனித நேயம் வளர்ப்போம்
இறைவனை அறிவோம்
இறையோடு ஒன்றுவோம்

தேடல் தொடரும் .

Friday, October 1, 2010

மனம்

அலைபாயும் மனத்தை அடக்கியே பார்த்தேன்
அந்தகோ பரிதாபம் என்று ஒரு குரல் கேட்டேன்
திரும்பி பார்த்தால் ஒருவரும் இல்லையே
ஆனால் மீண்டும் ஓர் சிரிப்பலை
புரியத்தான் இல்லையே - இந்த நையாண்டி
யார் என்று குழம்பித் தான் போனேன் ஒரு வினாடி
திடீரென ஒரு மின்னல் பளிச் பளிச் என் மண்டையில்
நையாண்டி மேளம் செய்தது என் மனமோ என்று
உடனே கேட்டேன் மனதை _ நீயா என்று
ஆமாம் அசடே நான் தான் என்றது
ஒரு புறம் அழுகை ஒருபுறம் கோபம்
என்ன திமிரா நையாண்டி ஏன் என்றேன்
என் அழுகையில் கரைந்த என் மனம் சொன்னது
என்னை அடக்க நினைக்காதே நான் அடங்க மாட்டேன்
என்னை அறிய நினையேன், நீ வேறு நான் வேறு அல்ல
என்பதை உணர்வாயே என்றது மனமே
முயற்சி செய்கிறேன் மனமே உனை அறிய தினமே
என்று முயற்சியை ஆரம்பித்தேன்.
ஹாய் என்ன குறட்டை காலை வேளையில்
என்ற கணவரின் குரல் கேட்டு எழுந்தால்
மீண்டும் கேட்டது மனத்தின் நையாண்டி