Friday, October 22, 2010

பாடம் படிப்போம்

நதிகள் ஆயிரம் சேர்ந்தாலும் கடல் கரை புரண்டு ஓடுவதில்லையே
ஆறுகள் நீரைக் கொண்டு சேர்க்காவிட்டாலும் கடல் வற்றுவதில்லையே
இன்ப துன்பம் இரண்டுமே இணைந்தது வாழ்க்கையே என்று அறிந்தும்
இன்பம் வரும்போது கொக்கரித்தும் துன்பம் வரும்போது துவண்டும்
வருந்தும் மூட மனிதா சுக துக்கம் இரண்டையும் ஒன்றாக பாவித்து
சம நிலையில் இருக்கக் கற்றுக்கொள் என்று சொல்கிறதோ கடலுமே?

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை அனைத்தையும் விலக்கினால்
மனிதன் மனிதாபிமானத்துடனும் இருந்துவிட்டால் வாழ்க்கையில் தான் ஏது துன்பம்
விட்டில் பூச்சிகள் சுகமாய் கூடி மகிழ்வாய் ஆடி பாடி பறந்து விளையாட
ஒரு விட்டில் பூச்சி விளக்கின் ஒளியில் மகிழ்ந்து அதில் தானே விழுந்து
மாண்டது போல் மனிதா நீயும் பெண்ணாசையில் மகிழ்தே உன்னை இழக்காதே
என்றே இந்த விட்டில் பூச்சி நமக்கு கூறும் அறிவுரையோ?

தினமும் அயர்ச்சியின்றி பூவிற்கு பூவாய்த் தாவி தாவி தேனீக்கள்
மதுவை உறிஞ்சி சேகரிக்க மானுடன் அதனை இரக்கமின்றியே
பறித்து தனக்கே பயன்படுத்த பாவம் தேனீ தன் தேவைக்கு மீறியே
சேகரித்த தேனை இழந்ததை போலே நாமும் ஆகக் கூடாது
தேவைக்கு மேலே பெறுவதை இல்லாதவருக்கு ஈயப் பழகுதல் வேணும்
தேவைக்கு மேலே சேர்த்தால் பறிபோய்விடும் என்பதை உணர்த்தும்
தேனீயின் செய்கை லோபியின் சொத்து பிறரிடம் சேரும் என்பதையும்
கூறாமல் கூறுகிறதோ?

குளவி ஒரு புழுவை கொட்டி கொட்டி குளவியாகவே மாற்றும்
குளவி போல் நாமும் இறைவனிடம் பக்தி காட்டி அன்பு செய்து
இறைவனாகவே ஆகமுடியும் என்பது குழவியின் போதனையோ?

சிறுவன் ஒருவன் கவலையின்றி ஆடி பாடி மகிழ்கிறான்
ஓடி ஓடி விளையாடுகிறான் கள்ளமில்லா வெள்ளை மனம்
காலத்தின் கோலத்தில் சிக்காத அன்பு மனம்
சிறுவனைப் போன்றே நாமும் கவலைகள் ஒழித்து
ஈசனிடம் அன்பு காட்டி அவன் அருள் பெறலாமா?

No comments: